Monday, September 5, 2011

தெய்வ திருமகள்

எவ்வளவு பெரிய தவறு நடந்து விட்டது என்று யாருக்‍கும் புரியவில்லை. கடந்த இரண்டாயிரம் வருடங்களாகவே இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்‍கிறது. இப்படியே பழகிப் போய்விட்டார்கள் இந்தியர்கள். அலெக்‍சாண்டரிலிருந்து ஆங்கிலேயர்கள் வரை இந்தியர்கள் என்றால் இளப்பமாகிவிட்டது. இப்படியே இந்தியாவை சுரண்டி சுரண்டி தங்களை வளமாக்‍கிக்‍ கொண்ட அந்நியர்கள் ஏராளம். இந்த அவலம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்‍கிறது. எப்படியெல்லாம் திருடுகிறார்கள் இந்த அயல்நாட்டவர்கள். விட்டால் மொட்டை அடித்து, காதுகுத்தி சாப்பிடுவதற்கு வாழைப்பழமும் ஒன்றுக்‍கு இரண்டாக கொடுத்துவிட்டுச் செல்வார்கள் இந்த அந்நியர்கள்.


ஒரு திரைப்படத்தை கூட விடமாட்டேன் என்கிறார்கள். என்ன அநியாயம். ஒரு கதையை கருவாக சுமந்து,அதை மாதக்‍கணக்‍கில் வளர்த்து, அழகுபடுத்தி, திரைக்‍கதை அமைத்து,அந்தக்‍ கதையை, கதாநாயகனில் ஆரம்பித்த, தயாரிப்பாளர் வீட்டு நாய்க்‍குட்டி வரை சொல்லி புரியவைத்து தாவு தீர்ந்து ​போய்,ஆன் ப்ரொடக்‍ஷனுக்‍கு சென்று, கதாநாயகியின் அம்மாவுக்‍கெல்லாம் விசிறிவிட்டு, ஆப்பிள் ஜூஸ் கொடுத்து, சொல்வதைக்‍ கேட்காத கேமராமேன் மேல் கொலைவெறி இருந்தாலும் அன்புடன் அண்ணா என்று அழைத்து,அடிபணிந்து போய், போஸ்ட் ப்ரொடக்‍ஷனுக்‍குள் நுழைந்தால், மிச்ச இருக்‍கும் உயிரையெல்லாம் எடுக்‍க எடிட்டிங், சி.ஜி, கலர்கரெக்‍ஷன், டப்பிங் என வரிசை கட்டி நிற்கும் அத்தனையையும் கடந்து, படத்திற்கு அழகான தமிழ்ப் பெயரை வைத்து, யு சர்டிபிக்‍கெட் வாங்கி வெளியே வந்தால், திருநெல்வெலியிலிருந்து எதிர்ப்பு வரும் படத்தின் பெயரை மாற்றுகிறாயா? இல்லை வாயைச் சேர்த்து வெட்டவா? என்று.

பகீரதனைப் போல் பிரயத்தனப்பட்டு அத்தனையைம் கடந்து வந்தால்,படம் ரிலீசாகிய அடுத்த நாள் கூவி,கூவி விற்றுக்‍ கொண்டிருப்பான். அந்த சகோதரனையும் மன்னித்து விட்டு,வரவிருக்‍கும் நெஞ்சுவலியை எதிர்பார்த்துக்‍ கொண்டிருக்‍கும் பொழுது,அதே திரைப்படத்துக்‍கு வெள்ளையடித்து,டிஸ்டம்பர் பூசி,வேறு தலைப்பிட்டு இன்னொரு படம் ஓடிக்‍ கொண்டிருக்‍கும். முருகா ஏன்?சிறிது சிறிதாக கொல்ல வேண்டும். கையில் இருக்‍கும் வேலை எடுத்து நடுநெஞ்சில் குத்தி கொல்வதற்கு உன்னைவிட்டால் வேறு யாருக்‍கு உரிமையிருக்‍கிறது,என்று கடவுளிடம் தனியாக ஒரு இயக்‍குனர் பேசிக்‍ கொண்டிருப்பதைப் பார்த்தால்,பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இயக்‍குனருக்‍கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றல்லவா நினைப்பார்கள். இப்படியா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஒரு திரைப்படத்தை டிட்டோவாக காப்பியடிப்பார்கள்.

அந்த சீன்பென் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன். ஒரு தமிழ்ப்படத்தை காப்பியடிக்‍க எப்படி மனசாட்சி வந்தது அவருக்‍கு. மில்க்‍ படத்திற்கு கொடுத்த ஆஸ்கர் விருதையெல்லாம் பிடுங்க வேண்டும். எப்படி இப்படியொரு காப்பிடிக்‍கும் மனநிலையில் உள்ளவருக்‍கு ஆஸ்கர் விருது கொடுத்தார்கள். ஆஸ்கர் விருது கமிட்டியினர் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.

ஐ ஆம் சாம் என்கிற படத்தைப் பார்த்தால் புரியும் அனைவருக்‍கும். நமது விக்‍ரம் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தை அப்படியே டிட்டோ செய்து வைத்திருக்‍கிறார்கள். ஈயடிச்சான் காப்பி தெரியுமா உங்களுக்‍கு...

பரீட்சை எழுதிக்‍ கொண்டிருக்‍கும் போதுதான் ஒரு ஈ எழுத விடாமல் எப்பொழுதும் கையை சுற்றி சுற்றி வந்து தொந்தரவு கொடுத்துக்‍ கொண்டிருக்‍கும். அதை அப்படியே பேப்பரோடு பேப்பராக வைத்து நசுக்‍கிவிட்டால்,ரத்தம் தெறித்து பேப்பரில் ஒரு லோகோ விழும். இந்நிலையில்,பின்னே அமர்ந்து காப்பியடித்துக்‍ கொண்டிருக்‍கும் திறமைமிக்‍க மாணவன்,அதே போன்றதொரு லோகோ வேண்டும் என்கிற விருப்பத்தின் பேரில்,ஒரு ஈயை தேடிப்பிடித்து பேப்பருக்‍கு நடுவில் வைத்து நசுக்‍கி ஒரு லோகோவை உருவாக்‍குவான். விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்‍கு இந்த செயலைத்தான் பொறுத்துக்‍ கொள்ள முடியாது. இதற்குத்தான் ஈயடிச்சான் காப்பி என்று பெயர் வைத்திருக்‍கிறார்கள்.

இந்த காப்பியடிக்‍கும் கலை சீன்பென்னுக்‍கு எப்படி தெரிந்தது என்றுதான் புரியவில்லை. தெய்வத்திருமகள் படத்தை ஈயடிச்சான் காப்பி செய்து வைத்திருக்‍கிறார் மனசாட்சியே இல்லாத மனிதப்பிறவி. விக்‍ரமை பார்த்து அப்படியே நடித்திருக்‍கிறார். ஒருவன் தலைமுடியை வெட்டிக்‍ கொள்வதைக்‍ கூட அப்படியே காப்பியடிக்‍க வேண்டுமா என்ன?மெண்டலி சேலஞ்ட் மனிதர்களுக்‍கு மத்தியில் அந்த ஹேர் ஸ்டைல் புகழ்பெற்றதா என்ன?அவர்கள் எல்லாம் அப்படித்தான் வெட்டிக்‍ கொள்ள விரும்புவார்களோ,விக்‍ரம் ஏதோ,இப்படி தலைமுடியை வெட்டிக்‍ கொண்டால் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போன்று இருக்‍கும் என்று நினைத்திருப்பார். அதைப்பார்த்து அப்படியே காப்பியடிக்‍க வேண்டுமா என்ன?இதற்கு பெயர்தான் ஈயடிச்சான் காப்பி என்பது. ஒரு கிரியேட்டருக்‍கும்,காப்பியடிப்பவருக்‍கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.

இவற்றைக்‍ கூட பொருத்துக்‍ கொள்ளலாம். ஆனால்,அந்த நான்கு பேர்..... கடவுளே....... அதே நான்கு பேர். ஏன்5 பேராக இருக்‍கக்‍ கூடாதா?இல்லை3 பேராக இருந்தால் அமெரிக்‍கர்கள் கோபித்துக்‍ கொள்வார்களா?இல்லை2 பேராக இருந்தால் படத்தின் தரம் குறைந்து போய்விடுமா? 4 பேர் என்றால்4பேர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த4பேருக்‍கு வேறு வேலையே இல்லை. அந்த4 பேரை பார்த்துக்‍ கொள்ள வேறு ஆட்கள் யாரும் தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்து்க கொள்வார்கள். அவர்களின் ஒரே பிரச்சனை கதாநாயகனின் பிரச்சனைதான். அவர்களுக்‍கென்று சொந்தப் பிரச்சனை எதுவும் கிடையாது என்று தமிழில் சொல்லப்பட்டது போல் தெளிவாக சொல்வதற்கு அமெரிக்‍கர்களுக்‍கு அறிவு பத்தாது என்றே தோன்றுகிறது.


எவ்வளவுதான் காப்பியடித்தாலும் சந்தானத்தைப் போன்று ஒரு கேரக்‍டரை யோசிக்‍க முடிந்ததா அவர்களால்,உலகத்திரைப்படம் எடுக்‍கிறேன் என்று சொல்லிக்‍ கொள்கிறார்கள்.

குழந்தையை பெற்றுக்‍ கொடுத்ததும் ஒரு தாய்,சீன்பென் போன்ற பைத்தியக்‍காரனை பொறுத்துக்‍ கொள்ள முடியாமல் ஓடிவிடுகிறாள். இப்படி தமிழ்நாட்டில் எங்காவது நடக்‍குமா?பெற்ற தாய் குழந்தையை விட்டு எங்காவது ஓடிப்போவாளா?கணவன் குடிகாரனாய் இருந்தால் என்ன?கூத்தியாள் வைத்திருந்தால் என்ன?இல்லை கூனனாய் இருந்தால்தான் என்ன?கணவனே கண்கண்ட தெய்வம் என்கிற கொள்கையிலிருந்து வழுவாத பாரம்பரியம் மிக்‍க தமிழ் கலாச்சாரத்தில் வாழ்ந்த பெண்கள் உள்ள நாட்டில் இதுபோன்றெல்லாம் நடக்‍குமா?

அதனால் குழந்தையை பெற்றவளை சாகடித்து, அந்த குழந்தைக்‍கு ஒரு பணக்‍கார சித்தியை உருவாக்‍கி,அவர்களை ஒரே இடத்தில் சந்திக்‍க வைக்‍கும் விக்‍கிரமாதித்தியன் கதை ட்விஸ்ட் எல்லாம் இந்தியர்களுக்‍குத் தான் கை வரும். இதுபோன்ற ட்விஸ்ட் எல்லாம் காப்பியடிப்பவர்களுக்‍கு எப்படி புரியவரும்,கிரியேட்டருக்‍கு மட்டும்தான் தோன்றும்.

வசனத்தைக்‍ கூட விட்டு வைக்‍காமல் காப்பியடித்துவிட்டு,வசனம் என்று தங்களுடைய பெயரை போட்டுக்‍கொண்டார்கள் அந்த பெரிய மனிதர்கள். அடுத்தவர் கருத்தை கேட்காமல் எடுத்துக்‍ கொள்வதில் என்னவொரு தடித்தனம்?அதுவும் நமது தமிழ்ப் படம்2011ல் வெளியாவதற்கு முன்பே,படத்தை அப்படியே சுட்டு2001ம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கில்லாடிகளாக இருக்க வேண்டும்?ஒருபெயருக்‍காவது நன்றி தெய்வத் திருமகள் என்று பெயர்ப்பலகை போட்டார்களா?அதுவும் இல்லை. உரிமம் பெறாமல் திருடி எடுத்துவிட்டு கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தொலைக்‍காட்சிகளில் எல்லாம் பேட்டி கொடுத்திருப்பார்கள் அவர்கள். என்ன செய்வது. கடவுளுக்‍குத்தான் வெளிச்சம்..

என் நண்பன் கூறுகிறான் இப்படியே தொடர்ந்து கூறிக்‍ கொண்டிருந்தால் அந்த ஆங்கிலப்படத்தை இயக்‍கிய இயக்‍குனர் செருப்பால் துரத்தி துரத்தி அடிப்பார்,அதனால் அடக்‍கிவாசி என்று கூறுகிறான். எதற்கு அப்படி கூறினான் என்றுதான் புரியவில்லை.

அய்யா சாமி சத்தியமா சொல்றேன்...இதுவும் அடிச்சான் காப்பி தான் ..

நன்றி..

3 comments:

  1. அய்யா சாமி சத்தியமா சொல்றேன்...இதுவும் ஈ அடிச்சான் காப்பி தான் ..

    நன்றி..

    ha ha ha

    ReplyDelete
  2. Thambi super o super. Kalakitinga. once again nice copy

    ReplyDelete