ஊழலை எதிர்த்து நாமெல்லாம் இதைப்போல எழுதி விட்டும் பேசி விட்டும் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடுகிறோம் ஆனால் அன்னா ஹஸாரே என்ற 72 வயதானவர் (இவர் ஒரு சமூக ஆர்வலர் ஆவார் இதற்கு முன்பே பல போராட்டங்களை ஊழலுக்கு எதிராக நடத்தி இருக்கிறார். மகாத்மா காந்தி மீது பெரு மதிப்பு வைத்து இருப்பவர்) ஊழலுக்கு எதிராக சட்ட மசோதா கொண்டு வரக்கூறி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி அதில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுள்ளார், இதற்கு கிரண் பேடி உட்பட பலர் ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து உள்ளார்கள் இதற்கு மேலும் ஆதரவு கூடும் என்று நம்புகிறேன்.
நான் கூட இது பற்றி NDTV.com ல் பார்த்த போது அவருடைய படத்தை மட்டும் பார்த்து விட்டு அதில் கூறியுள்ளதை படிக்காமல் சரி! எதோ ஒரு தாத்தா பொழுது போகாம எதோ போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார் போல என்று நினைத்து விட்டேன் .ஊழல் இந்தியாவை வேகமாக அழித்து வரும் ஒரு கொடிய நோயாக படு வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவும் சமீபமாக இதன் போக்கை பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது. தினமும் அந்த அரசியல்வாதி இவ்வளோ கோடி கொள்ளை அடித்தார் இவர் இவ்வளோ கையாடல் செய்தார் என்று வருவதைப் பார்த்தால் வருகிற ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. தற்போது ஆயிரத்தில் எல்லாம் ஊழல் செய்வது கீழ் நிலை ஊழியர் மட்டும் தான் தற்போதெல்லாம் லட்சம் கோடி (ஸ்பெக்ட்ரமை விடுங்க அது இல்லாமையே பல கோடி கொள்ளைகள் வந்து விட்டது.. ) கொள்ளைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.
இதை தேர்தல் கமிசன் போல தன்னிச்சையாக அரசின் கட்டுப்பாடில்லாமல் செயல்படும் ஒரு அமைப்பின் மூலம் தான் சரி செய்ய முடியும் என்று ஜன் லோக்பால் என்ற அமைப்பை செயல்படுத்தக்கூறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இருக்கிறார். இதன் மூலம் இந்த அமைப்பு ஊழல் செய்த அனைவரையும் விசாரிக்க முடியும் எந்த வித கட்டுப்பாடுமில்லாமல். இதில் மாநில அரசோ அல்லது மற்றவர்களோ இதில் தலையிட முடியாது அதாவது யோவ்! அவன் நம்ம ஆளுயா! இந்த விஷயத்தை கண்டுக்காதே! என்று கூற முடியாது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் தற்போது தமிழகத்தில் தேர்தல் கமிசன் அனைவரையும் சுளுக்கு எடுத்து வருவதைப்போல ஊழல் செய்யும் அனைவரையும் பெண்டு எடுக்க முடியும்.
ஜன் லோக்பால் மூலம் என்ன செய்ய முடியும்
மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும். உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது. மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.
ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும். பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும். ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.
லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம் இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும். ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர். புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.
நினைத்துப்பாருங்க இது போல சட்டம் வந்து ஊழல் குறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நம்ம நாட்டில் ஊழல் மட்டும் இல்லை என்றால் ஒரு பய நம்மை எதுவும் செய்ய முடியாது.. பட்டாசாக நம் நாடு முன்னேறும் ஆனால் பாருங்க இவற்றை எல்லாம் இப்படி நடந்தால்! என்று நினைத்துப்பார்த்து சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியை நிலையில் தான் நாம் இருக்கிறோம். எதுவும் நிஜமாக மாட்டேங்குது. நம்ம நாட்டில் இருக்கும் வளத்திற்கும் நம்மவர்கள் இடையே இருக்கும் திறமைக்கும் அமெரிக்கா எல்லாம் ஒன்றுமே இல்லைங்க. நம்மிடமும் ஊழல் இல்லாமையும் ஒழுக்கமும் இருந்தாலே போதும் அடி தூள் கிளப்பலாம் ஆனால் இவை அனைத்தும் நம்மால் செய்யக்கூடிய செயல் என்றாலும் செய்யாமல் இருக்கிறோம்.
நாம் எழுதி எல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை இதை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறேன். நான் இதற்காக என்ன செய்தேன்.. ஒரு துரும்பு கூட என்னளவில் இதற்காக நான் செய்யவில்லை. எனக்கே வெட்கமாக இருக்கிறது.. ஒரு வெங்காயமும் செய்யவில்லை! இதைப்போல எழுதுவதை தவிர. சும்மா இங்கே உட்கார்ந்துட்டு ஊழல், அராஜகம், இந்தியா அழியப்போகிறது.. நாடு கெட்டு விட்டது.. பூமா தேவி வாய பொளக்கப்போறா எல்லோரும் உள்ளே போகப்போறோம் ஐயோ அம்மா! என்று வசனம் பேசுவதில் என்ன அர்த்தம். இதைப்போல பேசுவதை பார்த்தால் இப்போதெல்லாம் எனக்கே காமெடியாக இருக்கிறது.
இவை எல்லாம் கூட உங்களுக்கு இதை பகிர மட்டுமே நான் ஒன்றும் செய்யப்போவதில்லை.. வெளிநாட்டில் இருக்கிறேன் குறைந்த பட்சம் என்னால் செய்யக்கூடிய ஒட்டுரிமையைக் கூட என்னால் பயன்படுத்த முடியாது. பின்ன இது பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? ஒன்றுமே செய்வதில்லை ஆனால் நாடு முன்னேறனுமாம்! இதை கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரலை…
ஆனா நம்மைப்போல ஹசாரே நினைக்கவில்லை. அதற்கான முயற்சியை எடுத்து இருக்கிறார் அவரளவில். இது வெற்றி பெறுமா அல்லது வழக்கம்போல புஸ்ஸுன்னு போய் விடுமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.. சரி! ஒரு நல்ல விஷயம் செய்து இருக்கிறார் அவரை பாராட்டனும் என்று தோன்றியது எழுதினேன். கிரிக்கெட் சினிமா பற்றி எழுதறோம், சுயமரியாதையை சுத்தமா மதிக்காதவங்களை பத்தி கவிதை எழுதறோம், இந்த தாத்தா பற்றி எழுதினால் என்ன குறைந்தா போய் விடப்போகிறேன்.
இங்கேயும் ஒரு பெரியவர் கலைஞர் இருக்கிறார் தேர்தல் கமிசன் நடவடிக்கைகளை, மக்களுக்கு எதிராக கமிசன் நடக்கிறது என்று முழங்கி “எமெர்ஜென்சி” என்று பெரிய வார்த்தைகளை எல்லாம் கூறி மக்களது (வணிகர்கள்) பார்வையை தேர்தல் கமிசனுக்கு எதிராக திருப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார். தேர்தல் கமிசன் நடவடிக்கைகளுக்கே இதைப்போல கூறினால் ஜன் லோக்பால் போன்றவை எல்லாம் (ஒருவேளை… ஒருவேளை தான்) வந்தால் ஐயோ அம்மா கொல்றாங்களே! என்று கூறுவாரோ!
சில தினங்களுக்கு முன்னாள் கூட 5 கோடி ஒரே சமயத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு என்ன கூறப்போகிறார்கள்? நேர்மையாக நடப்பவன் எவனாவது ஆம்னி பஸ் டாப்ல ஐந்து கோடியை கொண்டு செல்வானா! பிடிபட்டது ஐந்து கோடி பிடிபடாதது….. பாருங்க எவ்வளவு அநியாயம் நடக்கிறது என்று.
தற்போது ஊழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஓரளவு பரவி வருகிறது. இதற்காக ஏதாவது செய்யணும் என்று நினைக்கிறார்கள் அதை எப்படி சரியாக துவங்குவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அல்லது யார் முன்னெடுப்பது என்ற பிரச்சனையில் குழம்புகிறார்கள். இதோ! அன்னா ஹஸாரே ஆரம்பித்து வைத்து இருக்கிறார் இது வெற்றி பெறுமோ இல்லையோ அது வேறு விஷயம் இதை நாம் மற்றவர்களிடம் கூறுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லையே. நம்மால் எதுவும் நடக்கவில்லை என்றாலும் யாராவது இதற்காக முயற்சிக்காமலா போய் விடப்போகிறார்கள்!
ஊடகங்கள் கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் இதற்கு பாதி கொடுத்தால் கூட புண்ணியமாகப்போகும்.
ஜன் லோக்பால் மேலும் தெரிந்து கொள்ள http://indiaagainstcorruption.org/ செல்லுங்கள்
Please vote : http://voteforindia.org/home/enrolperson
எதை எதையோ ... 4 பேருக்கு அனுப்பினா எதோ நல்லது, 10 பேருக்கு அனுப்பினா ரொம்ப நல்லதுன்னு.. forward செய்யறோம் இந்த மாதிரி உருப்படியான செய்திய அப்படி forward செஞ்சா உன்மையாவே நல்லது நடக்கும்.